ஆப்பரேஷன் சிந்துாரில் கலக்கிய 'ஆகாஷ்தீர்': வெளிநாடுகளும் ஆர்வம்: டி.ஆர்.டி.ஓ., தகவல்
ஆப்பரேஷன் சிந்துாரில் கலக்கிய 'ஆகாஷ்தீர்': வெளிநாடுகளும் ஆர்வம்: டி.ஆர்.டி.ஓ., தகவல்
ADDED : மே 24, 2025 02:23 AM

நாக்பூர்: ஆப்பரேஷன் சிந்துாரில் கலக்கிய 'ஆகாஷ்தீர்' மீது, வெளிநாடுகளும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் ஷமீர் வி காமத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாக்., பயங்கரவாதிகளின் முகாம்களை நம் படையினர் தகர்த்தபோது, நம் 'ஆகாஷ்தீர்' என்ற வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டது.
முற்றிலும் நம் நாட்டிலேயே தயாரான ஆகாஷ்தீர் அமைப்பானது ரேடார்கள், சென்சார்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை, எளிதில் எடுத்துச் செல்லும் வாகன கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்பட்டதாகும்.
இதனால், எதிரி விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை துரிதமாக கண்டறிந்து தடுத்து அழிக்கும். ஆப்பரேஷன் சிந்துாரில் அதன் செயல்திறனை பார்த்து, பல்வேறு வெளிநாடுகளும் அதை வாங்குவதற்கு ஆர்வமுடன் உள்ளதாக டி.ஆர்.டி.ஓ., தலைவர் ஷமீர் வி காமத் நேற்று தெரிவித்தார்.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் நம் 'ராணுவத்துக்கான நவீன போர் கருவிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' சார்பாக, ட்ரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் தயாரிக்கும் பிரிவு, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது.
அதை, பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துாரில், 'ஆகாஷ்தீர்' செயல்பாட்டை பார்க்கும்போது, நாம் மிக முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டோம் என கருதுகிறேன். எனினும், சில பணிகள் நடைபெறுகின்றன. வரும் ஆண்டுகளில், 'சுயசார்பு பாரதம்' என்ற இலக்கை, முழுமையாக அடைந்து விடுவோம். ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டது. இதனால், மற்ற நாடுகளில் இருந்தும், அதன் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறும் போர்கள் எப்படி இருக்கும் என்றால், பாரம்பரிய போர் கருவிகளுடன் ட்ரோன்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் கலந்த மின்னணு யுத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.