கைப்பிடியும் கடத்தலுக்கு ஆயுதம்; சுருள் சுருளாக சுருட்டி ரூ.64 லட்சம் கரன்சி கடத்தியவர் கைது!
கைப்பிடியும் கடத்தலுக்கு ஆயுதம்; சுருள் சுருளாக சுருட்டி ரூ.64 லட்சம் கரன்சி கடத்தியவர் கைது!
ADDED : அக் 06, 2024 09:08 AM

மும்பை: 'வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த விமான பயணியின் ட்ராலி பேக் கைப்பிடிக்குள் சுருள் சுருளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணி கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சி.எஸ்.எம்.ஐ., விமான நிலையத்தில், தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில், அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் இரவு, அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி உடலில் மறைத்து, 1.165 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு பயணி, ட்ராலி பேக் கைப்பிடிக்குள் காலியாக இருக்கும் இடத்தில் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுருள் சுருளாக சுருட்டி, கைப்பிடிக்குள் திணித்து கொண்டு வந்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் நடத்திய சோதனையில், அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.