ADDED : நவ 01, 2024 04:16 AM

மூணாறு : மூணாறில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் சாகச சுற்றுலாவில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூணாறில் பருவ மழை முடிந்ததும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும். அப்போது நிலவும் குளிரை அனுபவிக்க பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் அளவில் வந்து செல்வர். கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.
அதிகரிப்பு:இந்தாண்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்பெயின், லண்டன் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குழுக்களாக அதிகம் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இஸ்ரேல் நாட்டு பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என்ற போதும், அங்கு கடந்தஓராண்டுக்கு மேலாக போர் நடப்பதால் ஒரு பயணி கூட வரவில்லை.
சாகச பயணம்:மூணாறுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ட்ரெக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட சாகச சுற்றுலாவில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாகனங்களில் செல்வதை பெரும்பாலும் தவிர்ப்பதால்சாகச சுற்றுலாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.