ADDED : நவ 07, 2024 01:45 AM
இந்துார், மத்திய பிரதேச சரணாலயத்தில் 10 யானைகள் பலியானதை தொடர்ந்து, யானைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து யானைகள் அதிகமுள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கார் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட சன்கானி மற்றும் பகேலி பகுதிகளில், அக்., 29ல் நான்கு யானைகள் மர்மமாக உயிரிழந்தன. அதேபோல் அக்., 30ல் நான்கு யானைகள்; அக்., 31ல் இரண்டு யானைகள் என மொத்தம் 10 யானைகள் உயிரிழந்தன.
இறந்த யானைகளின் உள்ளுறுப்புகளை மருத்துவ சோதனை செய்தபோது அதில், 'நியூரோடாக்சின் சைக்ளோ பியோசானிக்' அமிலம் இருப்பது தெரியவந்தது. இந்த நச்சுத்தன்மை யானைகள் உட்கொண்ட தினை வாயிலாக ஏற்பட்டதாக வனத்துறை ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை அடிப்படையில், பந்தவ்கார் புலிகள் சரணாலயத்தை சேர்ந்த இரு மூத்த அதிகாரிகளை, முதல்வர் மோகன் யாதவ் சஸ்பெண்ட் செய்தார்.
முதல்வர் மோகன் யாதவ் மேலும் கூறியதாவது:
ம.பி.,யில், 10 யானைகள் பலியானதை தொடர்ந்து யானைகளை பாதுகாக்கும் வகையில் யானைகள் அதிகம் வாழும் கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு மத்திய பிரதேச வனத்துறை அதிகாரிகளை பயிற்சிக்கு அனுப்ப உள்ளோம். இதன் வாயிலாக, இங்கு யானைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.