சபரிமலை பாதைகளில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வனத்துறை
சபரிமலை பாதைகளில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வனத்துறை
ADDED : நவ 28, 2025 11:25 PM

சபரிமலை: சபரிமலை வரும் பாதைகளில் பக்தர்களுக்கு பாதுகாப்பான பல்வேறு வசதிகளை கேரள வனத்துறை செய்துள்ளது. 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயில் பெரியார் புலிகள் சரணாலயம் காட்டுக்குள் அமைந்துள்ளது. எல்லா பாதைகளுமே காடுகளுக்குள் அமைந்துள்ளதால் பக்தர்களுக்கு உதவுவதில் வனத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
பெருவழிப்பாதையில் நான்கு அவசர சிகிச்சை மையம், ஒரு மருத்துவமனை வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் அழுதை முதல் பம்பை வரை இலவச குடிநீர், கழிவறை மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளது.
பக்தர்கள் உணவு கழிவுகளை வீசுவதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க போதுமான கழிவு தொட்டிகளை அமைத்துள்ளது.
காட்டுப்பாதைகளில் பாலித்தீன் பைகளை தவிர்ப்பதற்காக துணி பைகளை வழங்குகிறது. வனவிலங்குகளில் இருந்து பக்தர்களை காப்பாற்ற 30 யானை பாதுகாப்பு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. 12 பாம்பு பிடி வீரர்கள், ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்த 60 வன பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு உதவுகின்றனர். பக்தர்கள் தங்குமிடங்களில் சோலார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்த சீசன் தொடங்கிய பின் சபரிமலை பாதைகளில் 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளது. பம்பையில் வனத்துறையின் துணை கன்சர்வேட்டர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கிருந்து பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

