'வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு வனத்துறை அனுமதி கட்டாயம்'
'வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு வனத்துறை அனுமதி கட்டாயம்'
ADDED : டிச 20, 2024 11:11 PM

பெங்களூரு: ''விதிகளின்படி, வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பே, வனத்துறையிடம் பட தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்,'' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது:
'டாக்சிக்' படப்பிடிப்பு வனப்பகுதியில் நடத்தப்பட்டதால், பிரச்னை ஏற்பட்டது. எனவே வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு, பட தயாரிப்பு நிறுவனங்கள் வனத்துறையிடம் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும். அனுமதி பிரதியை திரைப்பட வர்த்தக சபையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தும்போது, புரொடக்ஷன் ஹவுஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் அனுமதி பெற வேண்டும்.
வனப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது, அங்குள்ள தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படத்தயாரிப்பு நிறுவனங்கள் சட்ட நெருக்கடியில் சிக்கக் கூடாது.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்புக்கு முன்னும், அதற்கு பின்னும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் போட்டோ பிரதிகளை திரைப்பட வர்த்தக சபையில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வன பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் மிகவும் கடுமையானது. புதிதாக பதவியேற்ற கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவரின் நடவடிக்கையை வரவேற்கிறோம். வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவோர், அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். 'டாக்சிக்' திரைப்பட படப்பிடிப்புக்காக, மரங்கள் வெட்டியதாக சர்ச்சை ஏற்பட்டது. எனவே படப்பிடிப்பு முடியும் வரை, கண்காணிக்கும்படி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- விஜய் நிஷாந்த்,
வனத்துறை அதிகாரி

