ADDED : ஏப் 24, 2025 11:14 PM
அலிப்பூர்: திருமண விழாவில் பங்கேற்ற தனக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மிரட்டல் விடுத்ததாக பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளார்.
டில்லி கன்டோன்மென்ட் தொகுதியில் இருந்து இரண்டு முறை ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுரேந்தர் சிங். 2022ல் பா.ஜ.,வில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 20ம் தேதி அலிப்பூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றபோது, என்னை கன்டோன்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., வீரேந்தர் சிங் கடியன் தாக்கி மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவம் பல்லா பக்தவர்பூர் சாலையில் உள்ள பிரிஸ்டல் பண்ணை வீட்டில் நடந்தது. கடந்த ஆண்டு அவரது மகன் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, வீரேந்தர் சிங் கடியன் தாக்கினார். போலீசில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேந்தர் சிங் அளித்த புகாரின்பேரில் அலிப்பூர் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

