பா.ஜ.,வில் இணைகிறார் கோல்கட்டா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
பா.ஜ.,வில் இணைகிறார் கோல்கட்டா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
ADDED : மார் 05, 2024 04:52 PM

கோல்கட்டா: கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய், பா.ஜ.,வில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.
கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவர், விசாரித்த வழக்கு தொடர்பாக பொது வெளியில் பேட்டி அளித்தார். அதன் மூலம் அவர் பரபரப்பாக பேசப்பட்டார். அவரை கண்டித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், நிலுவையில் உள்ள விவகாரங்கள் மீது பேட்டி அளிப்பது நீதிபதிகளின் வேலை அல்ல எனக்கூறியிருந்தார். பல்வேறு விவகாரங்களில் அபிஜித் கங்கோபாத்யாயின் பெயர் அடிபட்டது.
இந்நிலையில் அவர் நீதிபதி பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். அப்படி அறிவித்ததுமே, தங்களது கட்சியில் சேரும்படி திரிணமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்தார். இன்று அவர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.,வில் இணையப் போகிறேன். இதற்கான நிகழ்வு விரைவில் நடக்கும் என்றார்.
இந்நிலையில், அவரை தம்லுக் தொகுதியில் களமிறக்க பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. இத்தொகுதி திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி ஆகும்.

