உயர்த்தப்பட்ட குடிநீர், மின்சார கட்டணம் ரத்து முன்னாள் முதல்வர் வாக்குறுதி
உயர்த்தப்பட்ட குடிநீர், மின்சார கட்டணம் ரத்து முன்னாள் முதல்வர் வாக்குறுதி
ADDED : நவ 02, 2024 06:27 PM

புதுடில்லி:சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கவர்னரால் உயர்த்தப்பட்ட குடிநீர் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்,”என, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
டிரான்ஸ்போர்ட் நகரில் நேற்று விஸ்வகர்மா தின விழாவில், கெஜ்ரிவால் பேசியதாவது: மற்ற கட்சி தலைவர்கள் போல் நான் அரசியல்வாதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தேன். நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்தேன். அதனால் மக்களின் நல்வாழ்வுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான் சிறையில் இருந்தபோது, துணைநிலை கவர்னர் அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
அதற்காக டில்லி மக்கள் கவலைப்பட வேண்டாம். இப்போது நான் வெளியே வந்து விட்டேன். வரும் பிப்ரவரி மாதம் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கும். அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கவர்னரால் உயர்த்தப்பட்ட குடிநீர் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
ஆம் ஆத்மி அரசு டில்லியில் இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் ஆகியவற்றை ஏற்கனவே செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
உங்களுக்காக உழைத்தவர்களுக்கு, உழைப்பவர்களிக்கு ஓட்டுப் போடுங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என நான் சொல்லவில்லை. உங்களிடம் ஓட்டுக் கேட்டு வரும் பா.ஜ.,வினரிடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்தீர்கள்? என கேளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.