மாஜி முதல்வர் சொன்னது பொய் : மறுக்கிறார் கோவில் அதிகாரி
மாஜி முதல்வர் சொன்னது பொய் : மறுக்கிறார் கோவில் அதிகாரி
ADDED : ஆக 24, 2011 03:35 AM

திருவனந்தபுரம் : 'பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து பாயச பிரசாதம் கொண்டு செல்வது போல், பொக்கிஷத்தை மன்னர் எடுத்துச் சென்றார் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியது பொய்' என, பத்மநாப சுவாமி கோவில் செயல் அலுவலர் அரிக்குமார் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கோவில் பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு முன், சுவாமியின் கருத்து கேட்க வேண்டும் என்பதற்காக, தேவ பிரசன்ன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, கோவிலில் தற்போது தோஷ பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், கோவிலில் பாயச பிரசாதத்தை எடுத்துச் செல்வது போல், உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மன்னர் பொக்கிஷங்களை எடுத்துச் சென்றுள்ளார். அதை தடுக்க முயன்ற கோவில் அர்ச்சகரை, வென்னீர் ஊற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது என்றெல்லாம் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, 'காலம் வரும்போது அதற்கு பதில் சொல்கிறேன்' என்று மட்டும் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவில் செயல் அலுவலர் அரிக்குமார் கூறுகையில், 'தினமும் இக்கோவிலுக்கு உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலை 7.30 மணிக்கு வந்து, சுவாமி தரிசனம் முடித்து விட்டு காலை 7.50 மணிக்கு திரும்பி விடுவார்.
சுவாமிக்கு நைவேத்தியமான பாயசம், 8.15 மணிக்கு முன் சன்னிதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னரே வினியோகிக்கப்படும். கோவில் பொக்கிஷங்களை யாரும் தனியே சென்று எடுத்து விட முடியாதபடி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள நடைமுறைப்படி, எட்டு அல்லது 10 கோவில் ஊழியர்கள் இல்லாமல் அங்கு செல்ல இயலாது மட்டுமல்ல, எடுத்துச் செல்லவும் முடியாது. கோவிலில் தற்போதுள்ள 55க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்துள்ள கட்சி (மா.கம்யூனிஸ்ட் கட்சி)யின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாரும் இது போன்ற குற்றச்சாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. கோவிலில் 31க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களை யாரும் தாக்கியதாகவோ, கொடுமைப்படுத்தியதாகவோ இதுவரை புகார் செய்யவில்லை. ஆனால், கோவில் சொத்துகளை சேதம் விளைவித்தவர்கள், ஆவணங்களை சேதப்படுத்தியவர்கள் என சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாராவது எதிர்க்கட்சித் தலைவரிடம் தவறான தகவல்களை அளித்தனரா என்பது தெரியவில்லை. கோவிலையும், மன்னர் குடும்பத்தையும் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியது பொய்' என்றார்.