ADDED : ஜூலை 11, 2025 09:26 PM

புதுடில்லி:ஹரியானா காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., தரம்சிங் சோக்கர், சிறையில் இன்று சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்தவர் தரம் சிங் சோக்கர், 61. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 2019 - 2024 வரை சமல்கா தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார்.
இவர் மீது, 1,500 கோடி ரூபாய் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, மே 4ம் தேதி புதுடில்லி நட்சத்திர ஹோட்டலில் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட போது தான் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மருத்துவ சிகிச்சை பெற ஜாமின் கேட்டு சோக்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், ஜூன், 19ம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
அந்த உத்தரவில், ஜூலை, 12ம் தேதி சிறையில் அடைய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சோக்கர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அவரது கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இன்று மாலைக்குள் சிறை அதிகாரிகளிடம் சரண் அடைய உத்தரவிட்டது. சோக்கர் ஆரம்பத்தில் மே மாதம் நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார், ஆனால் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போதே, மே மாதத்தில், உச்ச நீதிமன்றத்தில் சோக்கர் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தை நாடுமாறு நிராகரித்தனர்.

