பொற்கோவிலை சுத்தம் செய்யும் தண்டனை: 'மாஜி' துணை முதல்வர் நிறைவேற்றினார்
பொற்கோவிலை சுத்தம் செய்யும் தண்டனை: 'மாஜி' துணை முதல்வர் நிறைவேற்றினார்
ADDED : டிச 04, 2024 05:10 AM

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோவில் உட்பட பல குருத்வாராக்களின் சமையலறை, குளியல் அறை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்யும் தண்டனையை, முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நேற்று நிறைவேற்றினார்.
பஞ்சாபில் பலமுறை ஆட்சியில் இருந்த அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர் சுக்பிர் சிங் பாதல், 62. முன்னாள் முதல்வர் மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறையும், பிரோஸ்புர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.
மத நிகழ்ச்சி
கடந்த 2015ல், அகாலி தளம் ஆட்சியின்போது, பஞ்சாபின் பரித்கோட்டில் உள்ள குருத்வாராவில் இருந்து, சீக்கியர்களின் புனித நுாலான குருகிரந்த் சாஹிப் திருடு போனது. பின், பரித்கோட்டின் பர்காரி என்ற இடத்தில் அந்த புனித நுாலின் பக்கங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது, சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், பஞ்சாபில் 'தேரா சச்சா சவுதா' என்ற அமைப்பின் தலைவர் ராம் ரஹிம், சீக்கிய மதகுருவை போல உடையணிந்து மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சவுதா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி ராம் ரஹிமுக்கு மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
![]() |
பதாகை
இந்த விவகாரங்களை சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த் விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்டில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம் தண்டனை அளிக்கப்பட்டது.
அதில், அமிர்தசரஸ் பொற்கோவில் உட்பட பல்வேறு குருத்வாராக்களில் உள்ள சமையலறை, குளியல் மற்றும் கழிப்பறைகளை சுக்பிர் சிங் பாதல், அவருடைய மைத்துனரும் அகாலி தள மூத்த தலைவருமான விக்ரம் சிங் மஜிதியா மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்ற தலைவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என, குறிப்பிடப்பட்டது.
இதன்படி, பொற்கோவிலில் சுத்தம் செய்யும் பணியை சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று நிறைவேற்றினர். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த சுக்பிர் சிங், தண்டனை விபரங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து, கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோவிலின் வாயிலில் அமர்ந்திருந்தார்.