ADDED : நவ 22, 2024 07:29 AM

பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவரான முன்னாள் துணை சபாநாயகர் மனோகர் தாசில்தார் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஹாவேரி ஹனகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் தாசில்தார், 80. ஹனகல் தொகுதியில் இருந்து கடந்த 1978ல் இந்திரா காங்கிரஸ் சார்பிலும், 1989, 1999, 2013ல் காங்கிரஸ் சார்பிலும் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால், காங்கிரசில் இருந்து விலகி ம.ஜ.த.,வில் இணைந்தார்.
ஹனகல்லில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த, லோக்சபா தேர்தலை ஒட்டி ம.ஜ.த.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
இந்நிலையில் வயோதிகம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோகர் தாசில்தார், பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான ஹனகல் அருகே அக்கிஹோலி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பலிஜா சமூக முறைப்படி இன்று அடக்கம் செய்யப்படுகிறது. பா.ஜ., மூத்த தலைவர் கிருஷ்ணா, காங்கிரசில் முதல்வராக இருந்த போது துணை சபாநாயகராக, மனோகர் தாசில்தார் பதவி வகித்திருந்தார்.
சித்தராமையாவின் 2013 --- 18 அமைச்சரவையில் கலால்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.