ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணம்
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணம்
ADDED : டிச 21, 2024 12:20 AM

குருகிராம்: இந்திய தேசிய லோக் தள தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, 89, மாரடைப்பால் காலமானார்.
ஹரியானா மாநிலத்தின் சிர்சாவில், 1935 ஜனவரி 1ம் தேதி பிறந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் துணை பிரதமருமான தேவி லாலின் மூத்த மகன்.
தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய ஓம் பிரகாஷ் சவுதாலா, குருகிராமில் உள்ள தன் இல்லத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி ஓம் பிரகாஷ் சவுதாலா மரணமடைந்தார். இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவருக்கு, அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா, ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர்.
கடந்த 2000ம் ஆண்டு, ஹரியானா அரசு சார்பில் 3,206 ஆசிரியர்களை முறைகேடாக நியமித்த குற்றச்சாட்டில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 2013ல் விதிக்கப்பட்டது.
இதேபோல் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு, ஓம் பிரகாஷுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தன் 87வது வயதில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்ட மிகவும் வயதான நபர் என்ற மோசமான சாதனைக்கும் ஓம் பிரகாஷ் சவுதாலா சொந்தக்காரர்.