கர்நாடகா முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை
கர்நாடகா முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை
UPDATED : மே 07, 2025 01:09 AM
ADDED : மே 07, 2025 12:33 AM

ஹைதராபாத்: சட்டவிரோத சுரங்க வழக்கில், கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா பா.ஜ.,வில் செல்வாக்கு பெற்றவராக வலம் வந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரும், இவரது சகோதரர் கருணாகர ரெட்டியும் சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறந்தனர்.
குற்றப்பத்திரிகை
பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவி வகித்தபோது, சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி.
கர்நாடகா - ஆந்திரா எல்லையில் உள்ள கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில், இரும்புத்தாது எடுக்க சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், ஆதாரங்களை மறைத்ததாக, ஜனார்த்தன ரெட்டி மற்றும் பிறர் மீது, 14 ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாதில், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்த 2007 - 2009 வரை நடந்த சட்டவிரோத சுரங்கத்தால், அரசுக்கு, 884 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு முதன்மை நீதிபதி டி.ரகுராம் நேற்று அளித்த தீர்ப்பு:
கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய, கங்காவதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி, அவரது மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முந்தைய சுரங்கத்துறை துணை இயக்குநர் வி.டி.ராஜகோபால்.
ஜனார்த்தன ரெட்டியின் தனிச்செயலர் மெகபுஸ் அலிகான் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையில் அடைப்பு
அதேநேரம், முன்னாள் அதிகாரி பி.கிருபானந்தம் மற்றும் முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜனார்த்த ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பால் ஜனார்த்தன ரெட்டியின் எம்.எல்.ஏ., பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.