கென்யா முன்னாள் பிரதமர் ஒடிங்கா கேரளாவில் மாரடைப்பால் மரணம்
கென்யா முன்னாள் பிரதமர் ஒடிங்கா கேரளாவில் மாரடைப்பால் மரணம்
ADDED : அக் 15, 2025 11:45 PM

கொச்சி: கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் காலமானார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2008 - 13ல் பிரதமராக இருந்தவர் ரெய்லா ஒடிங்கா, 80. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒடிங்கா, ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளம் வந்திருந்தார்.
நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடை ப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்தபோது மாரடைப்பால் ஒடிங்கா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒடிங்காவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
என் அன்பு நண்பரும், கென்யாவின் முன்னாள் பிரதமருமான ஒடிங்காவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. உயர்ந்த அரசியல்வாதியாகவும் நம் நாட்டின் நண்பருமாக திகழ்ந்தார். குஜராத் முதல்வராக இருந்தது முதல் ஒடிங்காவுடன் நான் நெருக்கமாக பழகி வருகிறேன்.
அவருக்கு இந்தியாவின் மீது அதீத பாசம் இருந்தது. நம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை அவர் வெகுவாக பாராட்டினார். அந்த மருத்துவம் அவரது மகளின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதை அவர் உணர்ந்தார். இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கென்ய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.