ADDED : பிப் 23, 2024 11:09 PM

மும்பை: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி, 86, மும்பையில் நேற்று காலமானார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோகர் ஜோஷி, கடந்த ஆண்டு மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கடந்த 21ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மனோஹர் ஜோஷி மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவசேனாவில், 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி தலைவராக விளங்கிய ஜோஷி, மஹாராஷ்டிர முதல்வராக, 1995 - 99 வரை பதவி வகித்தார். சிவசேனா சார்பில் முதல்வராக பதவி வகித்த முதல் நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
கடந்த 1999 லோக்சபா தேர்தலில், சிவசேனா சார்பில் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜோஷி, மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில், 2002 - 04 வரை லோக்சபா சபாநாயகராகவும் ஜோஷி பதவி வகித்துள்ளார்.