தெருநாய் விவகாரம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்
தெருநாய் விவகாரம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 01:56 AM

புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திரியும் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும்; நாய் கடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,”என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் கோயல் கூறினார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க, டில்லி உயர் நீதிமன்றம், 11ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, விலங்கு நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க தடை விதித்தது. மாறாக, தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், ரேபிள் தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டது.
மேலும், தெருநாய் களுக்கு உணவு அளிக்க பிரத்யேக இடங்களை உருவாக்கவும் அரசுக்கு, 22ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் கோயல் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கத்தினர், கன்னாட் பிளேஸில் இருந்து நேற்று ஊர்வலமாக வந்து, ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
அப்போது, விஜய் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:
தெருநாய்களை காப்பகங்களில் அடைத்து பராமரிக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல, நாய் கடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
தெருக்களில் திரியும் நாய்களுக்கு உணவளிப்பதை மக்களும் நிறுத்த வேண்டும். நம் நாட்டை வெறிநாய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.
தலைநகர் டில்லி மட்டு மின்றி நாடு முழுதுமே தெருநாய் கடித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் 2,000 பேர் நாய் கடித்து பாதிக்கப்படுகின்றனர்.
முன்னுரிமை இதற்கு யார் பொறுப்பேற்பது?- தெருநாய் களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் இதற்குக் பொறுப்பேற்றுக் கொள்ள முன் வருவார்களா? அல்லது நீதிமன்றமோ அரசோ பொறுப்பேற்குமா?
உலகின் பல நாடுகளில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைத்து பராமரிக்கின்றனர்.
அனைவரும் விலங்குகளை நேசிப்பவர்கள்தான். ஆனால், அதற்காக மனித உயிர்களைப் பணயம் வைக்க முடியாது. நாய்களை நேசிப்பவர்கள் காப்பகம் அமைப்பதை எதிர்க்கின்றனர். அவர்கள், தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறை தெருநாய்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில், சுகாதாரத் துறையினர் மனிதர்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தெரு நாய்களைக் கொல்ல வேண்டும் என நாங்கள் கூறவில்லை. அவற்றை, காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

