பணத்துக்காக போராடும் விலங்கு பிரியர்கள் முன்னாள் அமைச்சர் விஜய் கோயல் குற்றச்சாட்டு
பணத்துக்காக போராடும் விலங்கு பிரியர்கள் முன்னாள் அமைச்சர் விஜய் கோயல் குற்றச்சாட்டு
ADDED : ஆக 14, 2025 02:44 AM

புதுடில்லி:“தெருநாய்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தல்கதோரா மைதானத்தில் நடத்தப்படும்,” என, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் கூறினார்.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திரியும் அனைத்து தெருநாய்களையும், எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், மத்திய டில்லி பெங்காலி சந்தையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமன விஜய் கோயல் பேசியதாவது:
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களைப் பாதுகாக்கும் இந்த உத்தரவுக்காக, உச்ச நீதிமன்றத்துக்கு குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை நிறைவேற்றுவதன் வாயிலாக, தெருக்களும் பொது இடங்களும் பாதுகாப்பானதாக மாறும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தப்படுவதை மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும். டில்லி அரசும் முழுமனதோடு நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். நாய் கடித்து பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர வேண்டும் .
விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும். விலங்கு பிரியர்களில் பலர் பணத்துக்காக, அரசு சாரா தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றனர்.
அவர்கள்தான் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, குடியிருப்போர் நலச்சங் கங்களுடன் தல்கதோரா மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்