தினம் 2 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா திட்டம்
தினம் 2 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா திட்டம்
ADDED : ஜன 14, 2024 11:27 PM

ஷிவமொகா: லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயாராக்கும் நோக்கில், தினமும் இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேறகொள்ள, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தயாராகிறார்.
லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடக பா.ஜ., விறுவிறுப்பாக தயாராகிறது. சட்டசபை தேர்தல் தோல்வியால், பாடம் கற்றுள்ள கட்சி லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, இலக்கு நிர்ணயித்துள்ளது.
முன்னாள் முதல்வர்கள், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட, முக்கிய தலைவர்கள் லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றனர்.
குறிப்பாக, தன் மகன் விஜயேந்திரா, மாநில பா.ஜ., தலைவரான பின், எடியூரப்பா இளைஞரை போன்று உற்சாகத்துடன் செயல்படுகிறார். தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கிறார். பொங்கல் பண்டிகை முடிந்த பின், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகிறார்.
இது குறித்து, ஷிவமொகாவில் நேற்று எடியூரப்பா கூறியதாவது:
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். தினம் இரண்டு மாவட்டங்களில், நான் சுற்றுப்பயணம் செய்வேன். பா.ஜ.,வுக்கு மாநிலம் முழுதும், அதிகமான ஆதரவு கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் என்பதால், கட்சியின் மற்ற தலைவர்களும், சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளனர். நானும் கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் மாவட்ட சுற்றுப்பயணத்தை துவக்குவேன்.
அயோத்தியில் ஜனவரி 22ல், ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. இதை உலகமே கவனிக்கிறது. ஆனால், காங்கிரசாருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ராமர் கோவில் விஷயம், பா.ஜ.,வுக்கு அரசியல் ரீதியில் அனுகூலமாக இருக்கும் என்ற பீதி, காங்கிரசாரை வாட்டி வதைக்கிறது.
ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் போது, அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாகும். நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக பிரதமர் ஒருவர், விரதம் இருந்து ஆன்மிக சேவை செய்கிறார்.
காங்கிரசாருக்கு நல்ல புத்தி வரட்டும். ஜனவரி 22க்கு பின், அயோத்திக்கு செல்வதாக, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் இந்த நேரத்தில் செல்வது நல்லது. இதை பற்றி அவரே முடிவு செய்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.