கோவா முன்னாள் எம்.எல்.ஏ., கர்நாடகாவில் கொலை: ஆட்டோ டிரைவர் கைது
கோவா முன்னாள் எம்.எல்.ஏ., கர்நாடகாவில் கொலை: ஆட்டோ டிரைவர் கைது
ADDED : பிப் 15, 2025 09:04 PM

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவரால் தாக்கப்பட்ட கோவா முன்னாள் எம்.எல்.ஏ., லாவூ மம்லேதர் உயிரிழந்தார்.
கோவா மாநில முன்னாள் எம்.எல்.ஏ., லாவூ மம்லேதர், 68, பெல்காவி காதே பஜாரில் உள்ள ஹோட்டல் ஸ்ரீனிவாஸில் முகாமிட்டிருந்தார். இன்று பிற்பகலில் ஹோட்டல் வளாகத்திலிருந்து தனது காரில் வெளியே வரும்போது, அவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதனால் அவருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென ஆட்டோ டிரைவர், லாவூ மம்லேதரை தாக்கினார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் ரோஹன் ஜெகதீஷ் கூறியதாவது:
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி.,யில் பதிவாகி இருந்தது.
அதில் ஆட்டோ டிரைவர், மம்லேதரை பலமுறை தாக்குகிறார். இதனையடுத்து அவர் ஹோட்டலுக்குள் நடந்து சென்றார். பின்னர் அங்குள்ள வரவேற்பறையில் சரிந்து விழுந்தார்.
சிகிச்சைக்காக பெலகாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொலை வழக்குப் பதிவு செய்துஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளோம். மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.இவ்வாறு ரோஹன் ஜெகதீஷ் கூறினார்.