ஆட்டோ டிரைவருடன் தகராறு முன்னாள் எம்.எல்.ஏ., கொலை?
ஆட்டோ டிரைவருடன் தகராறு முன்னாள் எம்.எல்.ஏ., கொலை?
ADDED : பிப் 15, 2025 11:45 PM

பெலகாவி: கர்நாடகாவில், ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, கோவா முன்னாள் எம்.எல்.ஏ., மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் செயல்படும் மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் லாவோ மாமலோதர், 69. கடந்த 2012 - 2017 வரை, கோவாவின் போண்டா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
இவர், கர்நாடகாவில் உள்ள பெலகாவிக்கு பணி நிமித்தமாக நேற்று காலை வந்திருந்தார்.
பெலகாவி நகரின் கடே பஜார் அருகே சென்றபோது, இவரது கார், சாலையில் நின்றிருந்த ஆட்டோ மீது உராய்ந்தது.
இதை கவனிக்காமல் அவர் தொடர்ந்து பயணம் செய்தார். அவரது காரை விரட்டி வந்த ஆட்டோ டிரைவர், தகராறு செய்தார்.
இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது; கைகலப்பும் நடந்தது. அப்போது லாவோ மாமலோதரை, ஆட்டோ டிரைவர் சரமாரியாக தாக்கினார். இதில், லாவோ மாமலோதர் படுகாயமடைந்தார்.
சிறிது நேரத்தில், தான் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்ற லாவோ மாமலோதர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

