'மாஜி' எம்.எல்.ஏ.,வின் தம்பி ஆற்றில் குதித்து தற்கொலை?
'மாஜி' எம்.எல்.ஏ.,வின் தம்பி ஆற்றில் குதித்து தற்கொலை?
ADDED : அக் 06, 2024 11:43 PM

மங்களூரு : காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., மொய்தீன் பாவாவின் தம்பி மும்தாஜ் அலி, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று, சந்தேகம் எழுந்து உள்ளது. ரப்பர் படகில், தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்.
மங்களூரு வடக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., மொய்தீன் பாவா. இவரது தம்பி மும்தாஜ் அலி, 52. தொழில் அதிபர். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டில் இருந்து, பி.எம்.டபிள்யு., காரில் தனியாக புறப்பட்டார். காலை 5:00 மணிக்கு தனது மகளின் 'வாட்ஸாப்' பிற்கு, மும்தாஜ் அலி அனுப்பிய மெசேஜில், 'இனி நான் வீட்டிற்கு திரும்பி வர மாட்டேன்' என்று கூறி இருந்தார்.
மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள், குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மும்தாஜ் அலி மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, மங்களூரு கூலுார் ஆற்றுப்பாலத்தின் அருகில், மும்தாஜ் அலி கார் நிற்பதாக, குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்த போது, கார் விபத்தில் சிக்கியது தெரிந்தது. காரின் முன்பகுதி சேதம் அடைந்து இருந்தது. ஆனால் மும்தாஜ் அலி நிலை என்ன என்று தெரியவில்லை. அவர் ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. மொய்தீன் பாவா, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் அங்கு வந்தனர்.
மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் இணைந்து, ரப்பர் படகு மூலம் ஆற்றில் தேடினர். நேற்று இரவு வரை, மும்தாஜ் அலியை பற்றி எந்த தகவலும் இல்லை.