அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான வழக்கில் 'மாஜி' அதிகாரி கைது
அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான வழக்கில் 'மாஜி' அதிகாரி கைது
ADDED : அக் 23, 2025 11:57 PM

பத்தனம்திட்டா: கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலை மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்ட தங்கக் கவசங்களை புதுப்பிக்கும் பணி, 2019ல் நடந்தது.
விசாரணை பணிகள் முடிந்து, திருப்பி தரப்பட்ட போது, 4.50 கிலோ தங்கம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் உறுப்பினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்கம் மாயமான விவகாரத்தில் இடைத்தரகர் உன்னிகிருஷ்னன், தேவஸ்தான அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில், உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
முன்னதாக, செங்கனாசே ரியில் உள்ள அவரது இல்லத்தில், 10 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மனு தாக்கல் இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2019ல், தங்கக் கவசங்கள் புதுப்பிக்கும் பணிக்கு கொண்டு செல்லும்போது, முராரி பாபு நிர்வாக அதிகாரியாக இருந்ததாகவும், இவரது பொறுப்பில் தான் கவசங்கள் வெளியே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தங்கம் மாயமானதை அடுத்து, தேவஸ்தான துணை கமிஷனராக இருந்த முராரி பாபு, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

