ADDED : பிப் 16, 2024 07:10 AM

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா, 90, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.
முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமாக இருப்பவர் தேவகவுடா, 90. ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் இவர், இந்த வயதிலும், சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசினார்.
பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், நகரின் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியானது.
அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் மருத்துவமனையில், தேவகவுடாவுடன் உள்ளனர்.
இது குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் தேவகவுடா குறிப்பிடுகையில், 'சில டிவி சேனல்களில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
'நான் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு வந்துள்ளேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன். விரைவில் வீடு திரும்புவேன். அச்சப்படும் வகையில் ஒன்றுமில்லை' என தெரிவித்துள்ளார்.