முன்பு ‛பாரத் ஜோடோ': இனி ‛பாரத் டோஜோ ': ராகுல் புது வழி
முன்பு ‛பாரத் ஜோடோ': இனி ‛பாரத் டோஜோ ': ராகுல் புது வழி
ADDED : ஆக 29, 2024 03:51 PM

புதுடில்லி: பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட ராகுல், விரைவில் பாரத் டோஜா யாத்திரையை விரைவில் துவங்க உள்ளதாக கூறியுள்ளார். டோஜோ என்பதற்கு தற்காப்பு கலைக்கான பயிற்சிக்கூடம் என பொருள்படும்.
‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட அந்த வீடியோவில் ஜப்பானின் ஐகிடோ மற்றும் பிரேசிலின் ஜியு - ஜிட்சு தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதுடன், அதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அப்போது, ஐகிடோவில் கருப்பு பெல்ட் எனவும், ஜியு - ஜிட்சுவில் நீல நிற பெல்ட் எனவும் கூறுகிறார்.
இத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பாரத் ஜோடோ ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் தங்கும் முகாமில் தினமும் மாலையில் ஜப்பானியர்களின் தற்காப்புக் கலையான ஜியு - ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த இளம் தற்காப்புக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவினர்.
மேலும், தியானம், ஜியு-ஜிட்சு, அயிகிடோ ஆகியவற்றுடன் வன்முறையற்ற தீர்வு தொழில்நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம். வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதையும் நோக்கமாக கொண்டோம். இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்கினோம்.தேசிய விளையாட்டு நாளில், உங்களில் சிலரை இந்த கலை பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பு: பாரத் டோஜோ யாத்திரையை விரைவில் துவங்க உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
கடந்த செப்.,2022 முதல் ஜன.,2023 வரையிலும், பிறகு ஜன.,14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.