டிச., 6ல் பாபர் மசூதிக்கு அடிக்கல்: திரிணமுல் காங்கிரஸ் அடாவடி
டிச., 6ல் பாபர் மசூதிக்கு அடிக்கல்: திரிணமுல் காங்கிரஸ் அடாவடி
ADDED : நவ 23, 2025 11:29 PM

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல் டிசம்பர் 6ல் நாட்டப்படும்,” என, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஹுமாயுன் கபீர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஹுமாயுன் கபீர் நேற்று கூறியுள்ளதாவது:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கபட்டதன் 33வது நினைவு தினம், டிசம்பர் 6ல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திரிணமுல் சார்பில் அன்று, கொல்கட்டாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். அதே நேரத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்டங்காவில் பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்படும்.
இந்நிகழ்வில் முஸ்லிம் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த மசூதி மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பா.ஜ., உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:
பாபர் மசூதி கட்டுவது தொடர்பான அறிவிப்பு முதல்வர் மம்தா பானர்ஜி விருப்பத்தின்படி நடந்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மத அடையாளத்தை ஆயுதமாக திரிணமுல் எடுத்துள்ளது. இது கிரிமினல் அரசியலின் உச்சம்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை கண்டு ஒவ்வொரு இந்தியனும், ஹிந்துவும் மகிழ்ச்சி அடையும்போது, மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என்ற அறிவிப்பு, ஹிந்துக்கள் மீது மம்தா பானர்ஜி கொண்டுள்ள வெறுப்பை யும், சட்டவிரோத குடியேறிகள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

