ADDED : ஏப் 08, 2025 06:29 PM
புதுடில்லி:ஹோலி பண்டிகை நாளில் வாலிபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு டில்லியின் ஜஹாங்கிர்புரியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, அஜய் காத்ரி,30, என்பவரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியது. பலத்த காயங்களுடன் பி.ஜே.ஆர்.எம். மருத்துவமனையில் காத்ரி சேர்க்கப்பட்டார்.
போலீசில் அவர் கொடுத்த புகாரில், 'என் வீட்டில் நண்பருடன் ஹோலி கொண்டாடிக் கொண்டிருந்தேன். அப்போது, என் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் கத்தி, தடி மற்றும் செங்கல் ஆகியவற்றுடன் ஒரு கும்பல் என் வீட்டுக்கு வந்தது. என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். நான் ரத்த வெள்ளத்தி மயங்கி விழுந்தேன்'என கூறியிருந்தார்.
இதுகுறித்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் சுனில், தீபக், அமித் மற்றும் ஒரு சிறுவனை கடந்த வாரம் கைது செய்தனர்.
மேலும் சிலரை தேடி வந்த போலீசார், ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் அனில்,34, ராகுல்,24, சந்துலால்,58 மற்றும் அசோக் குமார்,58 ஆகிய நான்கு பேரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், காத்ரி மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
