ADDED : ஜூன் 09, 2025 12:18 AM
கஞ்ஜம்: ஒடிஷாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு சிறுமியரை கடத்தி சென்று, நான்கு இளைஞர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள பெர்கம்பூர் அருகேயுள்ள மர்கண்டி கிராமத்தில், கடந்த 3ல் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 14 மற்றும் 15 வயது சகோதரியர், பெற்றோருடன் சென்றிருந்தனர்.
ஏற்கனவே அறிமுகமான சிவா, 21, என்ற இளைஞர், சிறுமியரை கிராமத்திற்கு வெளியே கூட்டிச் சென்று, தன் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதற்கிடையே திருமண வீட்டில் இருந்த மகள்கள் இருவரும் மாயமானதால், பல இடங்களில் அவர்களை பெற்றோர் தேடினர்.
ஊருக்கு வெளியே சிறுமியர் இருவரும் கேட்பாரற்று நின்றிருந்தனர். அப்போது தங்களை நான்கு பேர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து சிறுமியரின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு தப்ப முயன்ற, சிவா உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.