சக மாணவரை கடத்திய கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர் கைது
சக மாணவரை கடத்திய கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர் கைது
ADDED : ஏப் 14, 2026 04:16 AM

பெங்களூரு: பணத்துக்காக சக மாணவரை கடத்திய, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ரிஷப் மொகந்தி, 19. பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள விடுதியில் தங்கி, மேலாண்மை கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை விடுதி முன் வந்த அவரை, நான்கு பேர் காரில் கடத்திச் சென்றனர்.
கடத்தியவர்கள், ரிஷப்பிடம் 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன அவர், தன் நண்பர்களுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார்.
அவரின் நண்பர்களோ, உடனடியாக, '112' என்ற போலீஸ் உதவி எண்ணை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தனர். இதையடுத்து மடிவாளா போலீசார், ரிஷப்பின் மொபைல் போன் சிக்னல் வாயிலாக, அவரும், அவரை கடத்தியவர்களும் பெங்களூரின் ஜெயநகரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று ரிஷப்பை மீட்டனர். அவரை கடத்திய நான்கு பேரும், ரிஷப் படிக்கும் அதே கல்லுாரியில் படித்து வருபவர்கள். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, 'நாங்கள் கடத்தவில்லை; எங்களிடம் அவர், 50,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
அந்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டோம்' என்றனர். அதற்கு ரிஷப் 'நான் அவர்களிடம் எந்த பணமும் வாங்கவில்லை' என்றார்.
இதையடுத்து, ஜெயநகரின் சையது பிலால், பீஹாரின் நிகுஞ்ச், மஹாராஷ்டிராவை சேர்ந்த அதிதா ராக்சி, கேரளாவின் சவுர்யா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், நிகுஞ்ச், அதிதா ராக்சி, சவுர்யா ஆகிய மூவரும், ரிஷப் தங்கி உள்ள விடுதியில் தங்கியிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஆடம்பர செலவுக்காகவே மாணவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
