கர்நாடகா உயிரியல் பூங்காவுக்கு வந்த நான்கு சிவிங்கிபுலிகள்
கர்நாடகா உயிரியல் பூங்காவுக்கு வந்த நான்கு சிவிங்கிபுலிகள்
ADDED : ஏப் 19, 2026 12:15 AM

பெங்களூரு: தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு சிவிங்கிபுலிகள், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பராமரிப்புக்கு விடப்பட்டன.
நம் நாட்டில், 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன சிவிங்கிபுலிகளை மீண்டும் கொண்டு வரும் வகையில், சிவிங்கிபுலி மறுவாழ்வு திட்டத்தை மத்திய அரசு 2022ல் முன்னெடுத்தது.
தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிபுலிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிலும், காந்தி சாகர் சரணாலயத்திலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென்னாப்ரிக்காவில் இருந்து இரு பெண் சிவிங்கிபுலிகள் உட்பட நான்கு சிவிங்கிபுலிகள், கர்நாடகாவின் பெங்களூருக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்துக்கு வந்தடைந்த சிவிங்கிபுலிகள் அனைத்தும், பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு பெங்களூரில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் விடப்பட்டன.
இதற்கான பணிகளை முன்னெடுத்த கர்நாடக வனத் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியதாவது:
பருவ நிலை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக, தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ள இந்த சிவிங்கிபுலிகளுக்கு, உடல் நல பிரச்னைகள் ஏற்படாத வகையில் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த விலங்குகள் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கப்பட வேண்டும்.
இவற்றிற்கு, ஏதேனும் தொற்று உள்ளதா என பரிசோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவிங்கிபுலி களை உரிய முறையில் பராமரிக்க உயிரியல் பூங்காவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 30 நாட்கள் தனிமைக்கு பின், சிவிங்கிபுலிகளை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக நான்கு சிவிங்கிபுலிகள் வந்ததை அடுத்து, நம் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
