ADDED : மார் 29, 2025 03:11 AM

குடகு : கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பேகூர் கிராமத்தில் வசித்தவர் கரியா, 75. இவரது மனைவி கவுரி, 70. இவர்களின் மகள் நாகி, 35. இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த கிரிஷ், 40, என்பவருக்கும் திருமணமாகி, காவேரி, 7, என்ற மகள் இருந்தார்.
கூலி வேலை செய்யும் கிரிஷ், மனைவி, மகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவிக்கு, வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கிரிஷ் சந்தேகித்தார்.
இது தொடர்பாக நேற்று காலை வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த கிரிஷ், தன் மாமனார், மாமியார், மனைவி, மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பினார்.
கரியா குடும்பத்தினர் தினமும் காலை தோட்ட வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று மதியம் வரை பணிக்கு வரவில்லை. இது பற்றி விசாரிக்க, சக தொழிலாளர்கள் கரியாவின் வீட்டுக்கு சென்றபோது, நால்வரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.