ரூ.85 லட்சம் போதை பொருளுடன் பெங்களூரில் நான்கு பேர் கைது
ரூ.85 லட்சம் போதை பொருளுடன் பெங்களூரில் நான்கு பேர் கைது
ADDED : நவ 27, 2024 05:00 AM

பெங்களூரு : புத்தாண்டு கொண்டாட்ட விற்பனைக்காக வைத்திருந்த 85 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு தினம் கொண்டாட்டத்தில், போதைப் பொருள் விற்பனையை தடுக்க, பெங்களூரு மாநகர போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டவர்
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர் குசி ஜுலியன் கிசன், 36. இவர், 2017ம் ஆண்டில், வர்த்தக விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். பெங்களூரு ஆர்.ஆர்., கல்லுாரி சாலையில் வசித்து வந்துள்ளார்.
கஷ்டப்படாமல் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார். இதற்காக, 'டார்க் வெப்' இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து, எம்.டி.எம்.ஏ., கிறிஸ்டல் எனும் போதைப் பொருளை வாங்கி உள்ளார்.
இதை கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களிடம் 12,000 முதல் 15,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். சோழதேவனஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 515 கிராம் எம்.டி.எம்.ஏ., கிறிஸ்டல் போதைப்பொருள், மொபைல் போன்கள், எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மாரத்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் அக்ரஹாரா, கரிமம்மா. இவர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம், 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர்.
தகவல் அறிந்த மாரத்தஹள்ளி போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்கம்
மற்றொரு சம்பவத்தில், மேற்கு வங்கத்திலிருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு ஒருவர் வாங்கி விற்பதாக தகவல் கிடைத்தது.
சம்பிகேஹள்ளி பிரதான சாலையில் உள்ள நீலகிரி தோப்புக்கு எதிரே உள்ள சாலையில், கஞ்சா விற்ற நபரை, சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.