சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் துப்பாக்கி வெடித்து நால்வர் காயம்
சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் துப்பாக்கி வெடித்து நால்வர் காயம்
ADDED : செப் 21, 2024 06:44 AM
சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில், சிறுத்தையை விரட்ட சென்ற போது, வனத்துறையினர் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததில், நால்வர் காயமடைந்தனர்.
சாம்ராஜ் நகர், எலந்துாரின், மல்லிகேஹள்ளி கிராமத்தில் சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதனால் கிராமத்தினர் வயல், தோட்டங்களுக்கு செல்ல அஞ்சினர். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர். சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
வனத்துறை ஊழியர்கள், நேற்று அதிகாலை சிறுத்தையை பிடிக்க கிராமத்துக்கு சென்றனர். சுற்றுப்புறங்களில் சிறுத்தையை தேடினர்.
அவர்களுடன் கிராமத்தினரும் சென்றனர். விவசாய நிலம் ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரிந்தது.
கூட்டத்தை கண்டு மிரண்ட சிறுத்தை, வனத்துறையினர் மீது பாய முற்பட்டது. வனத்துறையினர் தப்பி ஓட முயற்சித்த போது, ஊழியர் ஒருவரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்தது.
இதில் குண்டுகள் பாய்ந்து ரவி, 35, சிவு, 32, ரங்கசாமி, 38, மூர்த்தி, 35, காயமடைந்தனர். நால்வரையும் எலந்துார் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கொள்ளேகாலின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
'இவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை' என, டாக்டர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்தை, வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தில் சிறுத்தையும் உயிரிழந்தது. இதன் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.