ADDED : ஜன 31, 2025 12:17 AM
கதக்: கர்நாடக மாநிலம், கதக், கஜேந்திரகடாவின் லக்கலட்டி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ், 29. தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரும், இதே கிராமத்தைச் சேர்ந்த கங்கம்மா ராத்தோட், 23, என்ற பெண்ணும் பரஸ்பரம் காதலித்தனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், காதலர்கள் 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.
தலித் நபரை திருமணம் செய்து கொண்டதால், கங்கம்மாவின் உறவினர்கள் கோபம் அடைந்தனர். இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதன்படி, 2019 நவம்பர் 3ம் தேதி, ரமேஷும், கங்கம்மாவும் சாலையில் நடந்து சென்றபோது, இவர்களை வழிமறித்து கத்தியால் குத்தியும் மற்றும் உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தும் கொடூரமாக கொன்றனர்.
இது தொடர்பாக கங்கம்மாவின் உறவினர்களான சிவப்பா ராத்தோட், ரவிகுமார் ராத்தோட், ரமேஷ் ராத்தோட், அரசு பஸ் ஓட்டுநர் பரசுராம் ராத்தோட் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நால்வரும் ஆணவ கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, நால்வருக்கும் துாக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தண்டனை பெற்ற நால்வரும், கொலையான கங்கம்மாவுக்கு சகோதர உறவு முறை கொண்டவர்கள்.

