12வது மாடியிலிருந்து விழுந்து நான்கு வயது குழந்தை பலி
12வது மாடியிலிருந்து விழுந்து நான்கு வயது குழந்தை பலி
ADDED : ஜூலை 26, 2025 12:57 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் நைகாவுன் பகுதியில் நவ்கர் நகரம் உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் அன்விகா என்ற குழந்தை இருந்தது.
கடந்த 22ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அந்த குழந்தையும், அக்குழந்தையின் தாயும் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டனர்.
வீட்டை பூட்டிய தாய், குழந்தையை அருகில் உள்ள காலணிகள் வைக்கும் சிறிய மர அலமாரி மீது அமர வைத்தார். பின், குழந்தையின் செருப்பை எடுக்க முயன்றார். அப்போது, அருகில் இருந்த ஜன்னல் மீது குழந்தை ஏற முயன்றது. இதில், நிலை தடுமாறி, 12வது மாடியில் இருந்து தரைதளத்தில் விழுந்து உயிரிழந்தது.
வீட்டு வாசலை ஒட்டி இருந்த ஜன்னலில், உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாமல் இருந்ததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.