போலி பட்டச்சான்று வழங்கி மோசடி: ரூ.200 கோடி சொத்து பறிமுதல்
போலி பட்டச்சான்று வழங்கி மோசடி: ரூ.200 கோடி சொத்து பறிமுதல்
ADDED : ஜூலை 10, 2025 09:47 PM

புதுடில்லி: போலியாக பட்டச் சான்று வழங்கி மோசடி செய்த வழக்கில், மானவ் பாரதி பல்கலை உடன் தொடர்புடைய நபர்களின் ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள குமார்ஹட்டிக்கு அருகில் 2009ல் தொடங்கப்பட்ட மானவ் பாரதி பல்கலைக்கழகம், மானவ் பாரதி அறக்கட்டளைக்கு சொந்தமானது. இங்கு போலி பட்டப்படிப்பு சான்று வழங்கி மோசடி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
மானவ் பாரதி பல்கலை தலைவர் ராஜ் குமார் ராணா, பல கமிஷன் முகவர்களுடன் இணைந்து, பல்கலை பெயரில் போலி பட்டங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இவ்வாறு விற்பனை செய்ததில் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டன.
பலர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாவது:
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், போலி பட்ட மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட உயர்மட்ட கமிஷன் முகவர்கள் அபிஷேக் குப்தா, ஹிமான்ஷு சர்மா, அஜய் குமார் ஆகியோருக்கு சொந்தமானது.
இந்த சொத்துக்கள் பீகார், டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமைந்துள்ளன.
கமிஷன் முகவர்கள், இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, போலி பட்டங்களை வாங்குபவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் இணைத்து, சட்டவிரோத வருமானத்தில் ஒரு பங்கை கமிஷனாகப் பெற்றனர்.
இந்த வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு 194 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.