ADDED : பிப் 14, 2025 01:17 AM
காரைக்கால்:புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், சுப்ரமணியன் என்ற பக்தர் 2024 ஜன., 24ல், அஷ்டோத்திர அர்ச்சனை செய்ய, 981 ரூபாயை கோவில் இணையதள முகவரிக்கு அனுப்பியதாகவும், இதுவரை பிரசாதம் கிடைக்கவில்லை என, கோவில் நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தார்.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த மகாதேவனும், 4,500 ரூபாய் செலுத்தியும் பிரசாதம் வரவில்லை என, புகார் தெரிவித்தார். கோவில் நிர்வாக அதிகாரி அளித்த புகாரின்படி, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்தனர்.
அதில், அதே கோவிலில் குருக்களாக உள்ள, திருநள்ளாறை சேர்ந்த வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரைச் சேர்ந்த ஜனனிபரத் ஆகியோர் சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவர் துணையோடு உருவாக்கி, பக்தர்களிடம் மோசடி செய்தது தெரிந்தது. வெங்கடேஸ்வர குருக்கள், ஜனனிபரத் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

