UPDATED : நவ 12, 2024 06:33 AM
ADDED : நவ 12, 2024 06:14 AM

பைபரில் சிலை
உடுப்பி: உடுப்பியில் பரசுராமர் பூங்காவில் நிறுவுவதற்கு வெண்கலம் என்று கூறி, பைபரில் பரசுராமர் சிலை செய்து கொடுத்து ஏமாற்றிய சிற்பியை, புதுச்சேரி சென்று, கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் உடுப்பி மாவட்டம், கார்கலாவில் உள்ள உம்மிகல் மலையில், 2023 ஜனவரியில் பரசுராமர் பூங்கா திறக்கப்பட்டது. இங்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில், 33 அடி உயரம், 15 டன் எடை கொண்ட வெண்கலத்திலான பரசுராமர் சிலை நிறுவப்பட்டது.
துவக்கப்பட்ட சில நாட்களிலேயே பராமரிப்புப் பணிக்காக மூடப்பட்டது. இது பல சந்தேகங்களை எழுப்பியது. இதுதொடர்பாக, நல்லுாரை சேர்ந்த கிருஷ்ண ஷெட்டி என்பவர், கார்காலா போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் அங்கு நிறுவப்பட்டது, வெண்கலத்திலான சிலை அல்ல; பைபரில் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. திடீரென 2023 அக்டோபரில், சிலை இருந்த பகுதியை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டிருந்தது. இதை கண்டித்து காங்கிரசார், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
இவ்வழக்கில், சிலை வடிவமைத்த பெங்களூரை சேர்ந்த சிற்பி கிருஷ்ணா நாயக், 45, முன்ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆக., 21ல் மனுவை தள்ளுபடி செய்தது. சிற்பி கிருஷ்ணா நாயக் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கார்கலா போலீசார், சிற்பியை கைது செய்து, கர்நாடகாவுக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

