ADDED : டிச 26, 2024 02:51 AM

பான்டா :   உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்து ஆறு பேரின் நகை, பணத்தை திருடிய பெண், ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
உ.பி.,யில் உள்ள பான்டா பகுதியை சேர்ந்த சங்கர் உபாத்யாய். இவர் திருமணத்துக்காக பெண் தேடி வந்தார்.
இதை அறிந்த விமலேஷ் என்பவர் தனக்கு 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தெரிந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி சங்கரை கோர்ட்டுக்கு வரும்படி அழைத்த விமலேஷ் அங்கிருந்த பூனத்தை மணப்பெண் என அறிமுகம் செய்தார்.
மேலும் சஞ்சனா என்பவரை பூனத்தின் தாயார் என கூறினார். பின்னர் 1.5 லட்சம் கொடுத்தால் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக விமலேஷ் கூறினார்.
ஆனால் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சங்கர் திருமணத்துக்கு மறுத்தார்.
இதனால், சங்கரை கொலை செய்யப் போவதாக விமலேஷ் மிரட்டினார்.
இதையடுத்து, போலீசில் சங்கர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
மணப்பெண் போல் பூனமும்,  அவரது தாயார் போல் சஞ்சனா குப்தா என்ற பெண்ணும் நடித்து, இது போல் ஆறு ஆண்களை ஏமாற்றியுள்ளனர்.
திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு செல்லும் பூனம் மற்றும் சஞ்சனா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை, பணம் திருடி மோசடி செய்துள்ளனர்.
இவர்களுக்கு விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகியோர் உதவியுள்ளனர். எனவே மோசடியில் ஈடுபட்ட பூனம் உள்ளிட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாவதாக சங்கரை திருமணம் செய்து மோசடி செய்ய முயன்ற நிலையில், இந்த கும்பல் சிக்கியுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

