70 வயதை தாண்டிய அனைவருக்கும் இலவச மருத்துவம்: மோடி பெருமிதம்
70 வயதை தாண்டிய அனைவருக்கும் இலவச மருத்துவம்: மோடி பெருமிதம்
ADDED : அக் 30, 2024 01:52 AM

புதுடில்லி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் இனி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ''மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, அரசியல் விருப்பு வெறுப்பு காரணமாக டில்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் அமல்படுத்தவில்லை.
''இதனால், அப்பகுதியில் வாழும், 70 வயதுக்கு மேற்பட்டோர் இலவச மருத்துவம் பெற முடியாதது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது,'' என்றார்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, 2018ல் மத்திய அரசு துவங்கியது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
மருத்துவத்துக்கான ஹிந்து கடவுள் தன்வந்திரியின் பிறந்த தினம் மற்றும் 9வது ஆயுர்வேதா தினமான நேற்று, 12,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது, விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தையும் அவர் துவக்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்றவது ஆட்சி காலத்தின் போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என, கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தேன். அந்த உத்தரவாதம் இன்று நிறைவேறி உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை நான்கு கோடி ஏழை மக்கள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம் இல்லையெனில் அவர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் நிலை ஏற்பட்டு இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மருத்துவ செலவுக்கான சுமையை குறைப்பதே மத்திய அரசின் நோக்கம்.
மக்களுக்கு தேவையான மருந்துகளை 80 சதவீத தள்ளுபடியில் வழங்கும் 14,000 மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் 30,000 கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி உள்ளனர்.
இதய மருத்துவ சிசிக்சைக்கு தேவையான, 'ஸ்டன்ட்'கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செயற்கை மூட்டு ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மக்கள், 80,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தி உள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மருத்துவ செலவு சுமைகளை குறைக்கும் வரை ஓயமாட்டேன். நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சையை துவங்குவதற்காக, 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' என்ற பெயரில் நாடு முழுதும் இரண்டு லட்சம் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு புற்றுநோய், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகள் கிடைக்கின்றன.
மக்கள் ஆதரவு பெற்ற மத்திய அரசின் திட்டமான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.
இந்த, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வாயிலாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.
இந்த நேரத்தில், டில்லி மற்றும் மேற்கு வங்கத்தில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வலியும், வேதனையும் எனக்கு புரிகிறது. ஆனால், என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை.
டில்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளின் அரசியல் விருப்பு வெறுப்பு காரணமாக அவர்கள் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை அங்கு அமல்படுத்தவில்லை. இது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
இவ்வாறு அவர் பேசினார்.