அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆந்திராவில் இலவச நீட் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆந்திராவில் இலவச நீட் பயிற்சி
ADDED : ஜூன் 16, 2025 01:10 AM

அமராவதி: ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வை எதிகொள்ளும் வகையில், இலவச பயிற்சி திட்டத்தை அமைச்சர் நாரா லோகேஷ் துவக்கி வைத்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை நேற்று துவக்கி வைத்து, முதல்வர் சந்திரபாபுவின் மகனும், மாநில மனிதவள அமைச்சருமான நாரா லோகேஷ் கூறியதாவது:
புதிய திட்டம் வாயிலாக 1,355 அரசு ஜூனியர் கல்லுாரிகளில் படிக்கும் ஒரு லட்சம் மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி பெறுவர். நிபுணர்களால் சிறப்பாக உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதையொட்டி பள்ளி வேலை நேரம் மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு என தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் நடத்தி மதிப்பாய்வு செய்யப்படும்.
நுழைவுத்தேர்வு பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.