இலவச திட்டங்கள் நாட்டை பின்நோக்கி அழைத்து செல்லும்! காங்., வாக்குறுதிகளுக்கு நடிகர் சரத்குமார் கண்டனம்
இலவச திட்டங்கள் நாட்டை பின்நோக்கி அழைத்து செல்லும்! காங்., வாக்குறுதிகளுக்கு நடிகர் சரத்குமார் கண்டனம்
ADDED : ஏப் 24, 2024 07:20 AM
பா.ஜ., பிரமுகரும், பிரபல நடிகருமான சரத்குமார், பெங்களூரு தமிழர்களிடம் பிரசாரம் செய்து, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.
நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* கே: தமிழகத்தில் பிரசாரம் எப்படி இருந்தது? பா.ஜ.,வுக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது?
ப: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருமே சிறப்பான முறையில் வெற்றிக்காக உழைத்தனர். தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கருதுகிறோம். தமிழக மக்களிடம் பெரிய அளவில் மாற்றத்தை காண முடிகிறது. தி.மு.க.,வினரும் அ.தி.மு.க.,வினரும் கூட மாற்றத்தை விரும்பி, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
* கே: பிரதமர் நரேந்திர மோடிக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு போட வேண்டும் என்பது ஏன்?
ப: சிறந்த நிர்வாகம், அப்பழுக்கற்ற, ஊழல் இல்லாத ஆட்சியை தந்தவர். உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச் செய்தவர் மோடி. இன்று சர்வதேச தலைவர்களில் முன்னிலையில் இருப்பவர் மோடி. 11வது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம், இன்று 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அடுத்து முதலிடத்துக்கு வர வேண்டும்.
உக்ரைன் - ரஷ்யா போரை, பேச்சு மூலம் தீர்க்கலாம் என்றால், அது மோடியால் மட்டுமே முடியும். அவ்வளவு வல்லமை படைத்தவர். நம் நாட்டை வல்லரசாக மாற்ற மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். கச்சத்தீவு 1974ல் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான், தாரை வார்க்கப்பட்டது. இதை மீண்டும் பெறுவதற்கு பிரதமர் தீவிர முயற்சி மேற்கொள்கிறார்.
ஏன் 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். கேலோ இந்தியா, செஸ் போட்டிகளை துவக்கி வைக்க மோடியை அழைத்த தமிழக அரசு, அப்போது ஏன் ஒரு மனுகூட வழங்கவில்லை?
இலங்கையில், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது, இந்தியா தான் பெருமளவில் உதவியது. நாட்டின் முன்னேற்றம் தான், மக்களின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து செயல்படுபவர். உலக தலைவர்கள் மோடியை பாராட்டுகின்றனர் என்றால், அவரை பற்றி தெரியாமல் அல்ல.
* கே: நீங்கள் பிரசாரம் செய்த பெங்களூரின் பின்னிபேட், கே.பி., அக்ரஹாரா என தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப: பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன் என் நண்பர். அவருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்த பகுதிகளில், மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போன்று, கர்நாடக வாழ் தமிழர்களும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்பர். நான் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்தாலும், பி.சி.மோகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்திருப்பேன். 15 ஆண்டுகளாக அவர் செய்த வளர்ச்சிப் பணிகளால், இரண்டு முறை எம்.எல்.ஏ., மூன்று முறை எம்.பி.,யாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
* கே: இலவச வாக்குறுதித் திட்டங்கள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
ப: இலவசத் திட்டங்கள் அளிப்பது எனக்கு பிடிக்கவில்லை. அது நாட்டை பின்நோக்கி அழைத்துச் செல்லும். கல்வி, சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கலாமே தவிர, மற்றவற்றை இலவசமாக வழங்க கூடாது. அனைத்தும் இலவசமாக வழங்கினால், உழைக்க மாட்டார்கள்.
* கே: கர்நாடகாவில் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்தது. இதுபோன்று, லோக்சபா தேர்தலிலும் கவர்ச்சிகரமான வாக்குறுதித் திட்டங்களை அறிவித்துள்ளனரே?
ப: ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் ஏழை, எளியவர்களிடம் இன்றளவும் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது, அத்திட்டங்களை செயல்படுவத்துவது சிரமம் தான். காங்கிரஸ் திட்டங்களை நம்பி மக்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
* கே: விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ப: விருதுநகர் தொகுதியில், 1,680 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தினகரன், பன்னீர்செல்வம் என கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஓட்டுச்சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டன. அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளனர். பட்டாசு தொழிலுக்கு, அதிகமான அக்கறை காண்பித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி, சீன பட்டாசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 100 சதவீதம் முழு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இனி இறைவனிடம் விட்டுள்ளோம்.
* கே: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
ப: 2026க்கு வெகு நாட்கள் உள்ளன. பா.ஜ.,வுக்கு வலு சேர்க்கும் எண்ணத்துடன் உழைப்பேன்.
* கே: தென்காசி சட்டசபை தொகுதியில், 2011ல் வெற்றி பெற்றீர்கள். தற்போது, உங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு பிரசாரம் செய்தபோது மக்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
ப: நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது செய்த வளர்ச்சி பணிகளை நினைத்து, தென்காசி மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்றால், எனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது அல்லவா?
***

