மகா கும்பமேளாவுக்கு இலவச பயணமா? ரயில்வே அமைச்சகம் மறுப்பு
மகா கும்பமேளாவுக்கு இலவச பயணமா? ரயில்வே அமைச்சகம் மறுப்பு
ADDED : டிச 18, 2024 04:57 PM

புதுடில்லி: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு, பக்தர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று வெளியான தகவலை ரயில்வே அமைச்சகம் இன்று மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மகா கும்பமேளா திருவிழா, 2025 ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது. இந்த திருவிழா மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு ரூ.40 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சில தினங்களுக்கு முன் மகா கும்பமேளா திருவிழாவில் பங்கேற்கச்செல்லும் பக்தர்கள், இலவசமாக, ரயிலில் பயணிக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரவியது.
இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரம் இல்லாதது ஆகும். அப்படி எந்த ஒரு வழிகாட்டுதலையும் ரயில்வே அறிவிக்கவில்லை.
அவ்வாறு டிக்கெட் இல்லாமல் பக்தர்கள் பயணித்தால் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த திங்களன்று, இதேபோன்ற அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது.
அதில், பிரயாக்ராஜில் 'கும்பமேளா' செல்லும் வாகனங்களுக்கு கட்டணமில்லா பயணத்தை வழங்க எந்த ஏற்பாடும் இல்லை என்று கூறியது.
பிரயாக்ராஜில் தேசிய நெடுஞ்சாலைகளில் கும்பமேளா செல்லும் வாகனங்களுக்கு கட்டணமில்லா பாதை வழங்கப்படும் என்றும் தகவல்கள் பரவின. அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ன் படி தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி விலக்குகள் வழங்கப்படுகின்றன என்று விளக்கப்பட்டது.