சுதந்திர போராட்ட வீரர், மனைவியுடன் கொலை; வ.தேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை
சுதந்திர போராட்ட வீரர், மனைவியுடன் கொலை; வ.தேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை
ADDED : டிச 09, 2025 03:57 AM

டாக்கா: வங்கதேசத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, 75 வயதான சுதந்திரப் போராட்ட வீரரும், அவரது மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
கொடூரம்
இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதிலிருந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. ஹிந்து கோவில்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை, ஹிந்துக்களுக்கு எதிராக, 2000க்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், ரங்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தர் ரஹிமாபூரில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர் ஜோகேஷ் சந்திர ராய், 75, ம னைவி சுபோர்ணா ராய், 60, கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தனர்.
நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தனர்.
அப்போது, இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கொலை செய்யப்பட்ட ஜோகேஷ் சந்திர ராய், 1971ல் பாக்., உடனான போரில் பங்கேற்றவர். தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது இரண்டு மகன்களும் வங்கதேசத்தில் போலீசாக உள்ளனர்.
எச்சரிக்கை கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. மேலும் அந்த தம்பதிக்கு யாருடனும் விரோதம் இருக்க வாய்ப்பில்லை என்று, அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
எனவே, இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தான் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொலையாளிகளை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஹிந்துக்கள் எச்சரித்துள்ளனர்.

