சரக்கு லாரி மீது சரக்கு ரயில் மோதல் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
சரக்கு லாரி மீது சரக்கு ரயில் மோதல் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
ADDED : மார் 18, 2025 09:23 PM

அமேதி:உத்தர பிரதேச மாநிலம் அமேதி அருகே, அயோத்தி - -ரேபரேலி ரயில்வே கிராசிங்கில், கன்டெய்னர் லாரி மீது, சரக்கு ரயில் மோதியது. லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தால், தண்டவாளம் மற்றும் மின்சார கேபிளில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ- - வாரணாசி- - சுல்தான்பூர் வழித்தடத்தில் அயோத்தி- - ரேபரேலி ரயில்வே கிராசிங்கில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, ரயில்வே கேட் திறந்து இருந்தது. அப்போது, அந்த வழியில் சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக வந்தது. அதேநேரத்தில், ரயில் தண்டவாளத்தைக் கடக்க சரக்கு லாரி ஒன்றும் அதிவேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், லாரி மீது ரயில் மோதியது. இந்த சம்பவம் நடந்த போது, கேட் மேன் அங்கு இல்லை.
தூக்கி வீசப்பட்ட லாரி சுக்குநூறாக நொறுங்கியது. லாரி கிளீனர் சோனு சவுத்ரி,28, பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஜகதீஷ்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, முதலுதவி செய்த டாக்டர்கள், ஆபத்தான நிலையில் இருப்பதால் மாவட்ட மருத்துவமனைக்கு சோனுவை அனுப்பி வைத்தனர். அமேதி மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரயில் சேவை பாதிப்பு
இந்த விபத்து காரணமாக, தண்டவாளம் மற்றும் மின்சார கேபிள்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து, அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. சீரமைப்புப் பணிகள் முடிந்து காலை 7:00 மணிக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் கூறியதாவது: லக்னோ- - வாரணாசி- - சுல்தான்பூர் வழித்தடத்தில் அதிகாலை 3:10 மணிக்கும், அயோத்தி - ரேபரேலி வழித்தடத்தில் காலை 7:10 மணிக்கும் ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.