ADDED : மார் 21, 2025 04:04 AM

பெங்களூரு: டில்லி மெட்ரோ நிறுவனம், மெட்ரோ ரயில்களில் சரக்கு போக்குவரத்துக்காக, 'புளூ டார்ட் கார்கோ' கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதேபோன்று பெங்களூரிலும் மெட்ரோ ரயில்களில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி அளிப்பது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் ஆலோசிக்கிறது.
பெங்களூரு மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குனர் மஹேஸ்வர் ராவ் கூறியதாவது:
பெங்களூரு மெட்ரோவில் ஏற்கனவே பச்சை, ஊதா பாதைகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விலைவில் மஞ்சள், பிங்க் உட்பட மற்ற பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும். மெட்ரோ ரயில்களில் சரக்கு போக்குவரத்து துவக்கினால், மெட்ரோ செயல் திறன் எல்லை விரிவடையும்.
எந்த அளவுக்கு சரக்கு கொண்டு செல்லலாம்; எந்த விதமான சரக்குகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
'பீக் ஹவர்' இல்லாத நேரத்தில், சரக்கு போக்குவரத்து நடத்த ஆலோசிக்கிறோம். இது குறித்து, தனியார் கார்கோ நிறுவனங்களுடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.
காலை 8:00 மணி வரை; மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, இரவு 9:00 முதல் 11:30 மணி வரை, 'நான் பீக் ஹவர்' என, கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால், வருவாய் பெறலாம் என, மெட்ரோ பயணியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்படும். சரக்கு போக்குவரத்து துவங்கினால், வருவாய் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

