வெடிகுண்டு வச்சிருக்கேன்! ஒரு மிரட்டலால் ரத்தான 27 விமான சேவைகள்
வெடிகுண்டு வச்சிருக்கேன்! ஒரு மிரட்டலால் ரத்தான 27 விமான சேவைகள்
ADDED : அக் 25, 2024 08:32 PM

புதுடில்லி: வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பல்வேறு விமான நிறுவனங்களின் சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
எப்படி தடுப்பது என்று தெரியாத நிலையில் உள்ளன விமான நிறுவனங்கள். கடந்த 2 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் 160 மிரட்டல்கள் வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து விமான நிறுவனங்களும் எடுத்து வருகின்றன.
இந் நிலையில், இன்று 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா விமான நிறுவனங்களும் மிரட்டலுக்கு தப்பவில்லை. மொத்தம் 6 ஏர் இந்தியா, 7 இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் 27 விமானங்களுக்கான வெடிகுண்டு மிரட்டலை சந்தித்துள்ளன.
அனைத்து மிரட்டல்களும் சமூக வலைதளங்கள் மூலமாக விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக எக்ஸ் வலைதளம் மூலமே இந்த மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் மிரட்டல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
தொடர் விசாரணை மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக, மிரட்டல்களின் பின்னணியில் உள்ள சில நபர்களை அதிகாரிகள் நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.