ADDED : மார் 16, 2025 11:37 PM
மங்களூரு: நண்பரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் முல்கியை சேர்ந்த 35 வயது நபர், கார்காலாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சிக்கமகளூரை சேர்ந்த இவரின் நண்பர், தன் 17 வயது மகள் பி.யு.சி., படிப்பதற்காக, இவரது அறையில், 2023 ஜூன் முதல் டிசம்பர் வரை தங்கியிருந்தார்.
இந்த காலகட்டத்தில் நவம்பரில், கார்காலாவில் உள்ள மலை அடிவாரத்துக்கு மாணவியை அழைத்து சென்று, 35 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார்.
மேலும் தங்கி உள்ள வீட்டிலேயே சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். பெற்றோர் அதட்டி கேட்டபோது, உண்மையை கூறியுள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி, முல்கி போலீசார் வழக்கு பதிவு செய்து, கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மானு, ''குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்தவில்லை என்றால், கூடுதலாக நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அவரின் அபராத தொகையை, சிறுமிக்கு வழங்க வேண்டும். அத்துடன் சட்ட சேவை ஆணையம் மூலம், சிறுமிக்கு 6.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றும் தீர்ப்பளித்தார்.