புடின் வருகையால் அமெரிக்கா, சீன உறவுகள் பாதிக்காது; சொல்கிறார் சசி தரூர்
புடின் வருகையால் அமெரிக்கா, சீன உறவுகள் பாதிக்காது; சொல்கிறார் சசி தரூர்
ADDED : டிச 05, 2025 09:48 AM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்புவதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; முக்கியமான தருணத்தில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். ரஷ்யா உடனான உறவு மிகவும் முக்கியமானது. இருநாடுகளுக்கு இடையே நீண்ட கால உறவு இருந்து வருகிறது. உலகில் பல நாடுகளுடனான உறவுகள் நிச்சயமற்றதாக இருந்து வரும் நிலையில், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்துவது அவசியமானதாகும்.
ரஷ்யாவுடனான நட்பிற்கு அடையாளமாக அண்மை காலமாக எண்ணெய் மற்றும் கியாஸை அதிகளவில் பெற்று வருகிறோம். ரஷ்யாவிடம் இருந்து பெற்ற பாதுகாப்பு உபகரணங்கள், ஆப்பரேஷன் சிந்தூரின் போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது. குறிப்பாக, எஸ் 400 ஏவுகணை தடுப்பு தளவாடம், பாகிஸ்தானின் ஏவுகணைகளிடம் இருந்து டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை பாதுகாத்தது.
ராஜதந்திர சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையினால் இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இது மற்ற நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு நாடுடனும் சுந்திரமான உறவுகளை வைக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இந்தியா எப்போதும் இறையாண்மையை நம்பியுள்ள ஒரு தேசம். நட்பு, கூட்டாட்சி, மற்றும் தேசிய நலன்களை தீர்மானிப்பது நமது டிஎன்ஏவில் இருக்கிறது.
புடினின் இந்த வருகையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகினால், இருநாடுகளிடையேயான உறவு மேலும் வலுப்படும். இந்த செயல் அமெரிக்கா, சீனா உள்பட பிற நாடுகளுடனான உறவுகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று நம்புகிறேன். ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளுடனும் நாம் சுதந்திரமான உறவைக் கொண்டிருப்போம், இவ்வாறு அவர் கூறினார்.

